தஞ்சை # இராஜராஜ சோழன் # மராத்திய மன்னர்கள் # பயன்படுத்திய பொருட்கள்
У вашего броузера проблема в совместимости с HTML5
முதலாம் இராஜராஜ சோழன்
கோப்பரகேசரி வர்மர் முதலாம் இராசராச சோழன் சோழர்களின் புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவனாவார். 'சோழ மரபினரின் பொற்காலம்' என்று போற்றத்தக்க வகையில் ஆட்சி செய்த இம்மன்னனின் ஆட்சிக்காலம் கி.பி 985 முதல் கி.பி 1014 வரையாகும். இவர் மகன் முதலாம் இராசேந்திரன் காலத்தில் சோழநாடு கடல் கடந்து பரவிய பெருமைக்கு அடிகோலியதும் இம்மன்னனே. இராசராச சோழனின் முப்பதாண்டு ஆட்சிக்காலமே சோழப் பேரரசின் வரலாற்றில் மிக முக்கியமாக விளங்கியது. ஆட்சி முறை, இராணுவம், நுண்கலை, கட்டடக்கலை, சமயம், இலக்கியம் ஆகிய பல்வேறு துறைகளில் புதிய எழுச்சியைக் கண்ட சோழப்பேரரசின் கொள்கைகள் இவனுடைய ஆட்சியில் உருப்பெற்றவையே.
இவர் கி.பி 957 முதல் கி.பி 973 வரை சோழ நாட்டை ஆண்ட சுந்தர சோழனுடைய இரண்டாவது மகனாவார். சுந்தர சோழனுக்கும் சேர நாட்டு வானவன் மாதேவிக்கும் ஐப்பசி திங்கள் சதய நன்னாளில் பிறந்த இவனது இயற்பெயர் "அருள்மொழிவர்மன்". இராஜகேசரி அருள்மொழிவர்மன் என்ற பெயராலேயே தன் ஆட்சியின் தொடக்க காலத்தில் இம்மன்னன் அழைக்கப்பட்டான். இவர் ஆட்சியின் 3ம் ஆண்டு முதலே ராச ராச சோழன் எனப்பட்டான் (988) தந்தை இறந்ததும் இவன் உடனடியாகப் பதவிக்கு வரவில்லை. 15 வருடகால உத்தம சோழனின் ஆட்சிக்குப் பின்னரே இவன் க்ஷத்திரிய முறைபடி ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.ராஜராஜசோழன் தன்னை அரசர்களுக்கு எல்லாம் அரசன்(க்ஷத்திரிய சிகாமணி) என்று புனைப்பெயர் கொண்டு வாழ்ந்தான். விசயாலய சோழன் நிறுவிய சோழ அரசு இவர் காலத்திலும் இவர் மகன் இராசேந்திர சோழன் காலத்திலும் மிக உயர்நிலை எய்தியது. இராசராசனின் காலம் பிற்காலச் சோழர் வரலாற்றில் மட்டுமன்றித் தென்னிந்திய வரலாற்றிலேயே ஒரு பொற்காலமாகும்.
இராஜராஜ சோழனின் மெய்க்கீர்த்திகளில் ஒன்று.
"ஸ்வஸ்திஸ்ரீ் திருமகள் போல பெருநிலச் செல்வியுந் தனக்கேயுரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச் சாலைக் களமறூத்தருளி வேங்கை நாடும் கங்கைபாடியும் நுளம்பபாடியும் தடிகை பாடியும் குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும் எண்டிசை புகழ்தர ஈழ மண்டலமும் இரட்டபாடி ஏழரை இலக்கமும் திண்டிறல் வென்றி தண்டால் கொண்டதன் பொழில் வளர் ஊழியுள் எல்லா யாண்டிலும் தொழுதகை விளங்கும் யாண்டே செழிஞரை தேசுகொள் ஸ்ரீ்கோவிராஜராஜகேசரி பந்மரான ஸ்ரீராஜராஜ தேவர்."
தஞ்சைப் பெருவுடையார் கோயில்
இராஜராஜ சோழனால் தஞ்சையில் எடுப்பிக்கப்பட்ட இராஜராஜேஸ்வரம் என்னும் சிவன் கோயில், தென் இந்திய வரலாற்றுப் பகுதியில் தலைசிறந்த சின்னமாகும் தமிழ் கட்டடக் கலைக்கே பெருமை தேடித்தரும் கலைக் கருவூலமாகவும் இம்மன்னனின் ஒப்பற்ற ஆட்சியின் நினைவுச் சின்னமாகவும் இன்றளவும் இக்கோயில் விளங்கி வருகிறது. இக்கோயில் வானளாவி நிற்பதோடு எளிமையான அமைப்பையும் உடையது. இராஜராஜனின் 25ம் ஆண்டின் 275ம் நாளில் இது கட்டி முடிக்கப்பட்டது.